கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படுவாரா? வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு. டெல்லி பரபர

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என ஆம் ஆத்மி கூறியுள்ள நிலையில் அவரது வீட்டிற்கு செல்லும் சாலைகள் முடக்கப்பட்டுள்ளன.

Update: 2024-01-04 03:57 GMT

அரவிந்த் கெஜ்ரிவால் 

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, 2 வது முறை ஆஜராக கடந்த மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட இருப்பதால் விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் திடீரென அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலம் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனைக்குப் பிறகு இன்று கைது செய்யப்படலாம் என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கெஜ்ரிவாலின் இல்லத்திற்குச் செல்லும் சாலைகள் டெல்லி காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் அமலாக்க இயக்குனரகம் முன்பு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில்,  கெஜ்ரிவாலுக்கு இது மூன்றாவது நோட்டீஸ் ஆகும்.

பல ஆம் ஆத்மி தலைவர்கள் புதன்கிழமை,  கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறையினரால் சோதனை நடத்தப்படும் என்றும், அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறினர். 

இந்நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி மாநில ஆம் ஆத்மி மந்திரி ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அவர் நேற்று தனது எக்ஸ் வலைத்தள் பக்கத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது' என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகிய நிலையில், அவரது வீட்டின் முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்கள் அதிகளவில் குவிய இருப்பதால் அங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News