மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் ஆதார் அட்டை: மத்திய அரசு
மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் பிரத்யேக பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.;
கடலோர காவல் படையினரின் அச்சுறுத்தலில் இருந்து மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் பிரத்யேக பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி, சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை விரைந்து பெற வசதியாக மீனவர்களுக்கு பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்கப்படுமா? அவர்களுக்காக அமல்படுத்தப்படும் நல்வாழ்வுத் திட்டங்கள் என்ன? என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி, சோமு ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, “கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதுடன், க்யூஆர் கோடுடன் கூடிய பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளும் மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில், 19.16 லட்சம் மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகளும், 12.40 லட்சம் மீனவர்களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அடையாள அட்டைகள் மூலம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் வழங்கப்படும் நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அவர்கள் எளிதில் பெற வழிவகை ஏற்படுவதுடன், கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, கடலோரப் பாதுகாப்புப் படையினரிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் இந்த பிரத்யேக அடையாள அட்டைகள் பயன்படுகின்றன.
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களின் நலனைப் பேணுவதற்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் நீலப்புரட்சியின் ஒரு பகுதியாக, 2015-16 முதல் 2019-20 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் அமல்படுத்தப்பட்ட மீன்வளத்துறைக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மேலாண்மைத் திட்டம்; 2023-24 ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு 7,522 கோடி ரூபாய் செலவில் அமல்படுத்தப்படுள்ள மீன்வளர்ப்பு கட்டமைப்பு வளர்ச்சி நிதி மூலமாக மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய நிதி உதவி அளிப்பது; மீனவர்களுக்கென பிரத்யேக கடன் அட்டைகள் வழங்குவது போன்ற திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன.
ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக மீனவர்களின் நலனுக்கென அமல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், மீன்பிடிப் படகு, வலை, தொலைத் தொடர்பு சாதனங்களை மீனவர்கள் வாங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுதவிர நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க உதவும் உபகரணங்கள், மீன் வளர்ப்புக்கான குளங்கள், குட்டைகள் அமைப்பது, மீன்களைப் பதப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்துவது போன்றவைகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்கள் உள்ளிட்ட கடல்சார் பொருட்களுக்கு உரிய விலையைப் பெறுவது உறுதிசெய்யப்படுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரமும் மேம்படுகிறது.
அத்துடன் மீன்பிடித் தடைக்காலத்தில், பாரம்பரிய மீனவர்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்படாமல் இருக்கவும், அந்த நேரத்தில் சத்தான உணவு வகைகள் அவர்களுக்கு கிடைக்கவும், மீனவர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்தவும் இந்தத் திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மீனவர்கள் நலனுக்காக தமிழ்நாடு அரசிடம் இருந்து 897 கோடி ரூபாய்க்கான திட்ட முன்வரைவு பெறப்பட்டு, அதில் 252 கோடி ரூபாய் நிதி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மீன்வளர்ப்பு கட்டமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு 1,091 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீன் சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், மீன் வளர்ப்பு தொழில் புரிவோர், மீன் விற்பனையாளர்கள், மீன் தொழில் நிறுவனங்கள், அவர்கள் தொடர்பான கூட்டுறவு அமைப்புகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோருக்கு தேசிய மீன் வளர்ச்சிக் கழகம் மற்றும் மாநில மீன்வளத்துறையின் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதுடன் அதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார்.