ஒடிசாவில் சிக்கித் தவித்த 250 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்ட சிறப்பு ரயில்
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கித்தவித்த 250 பயணிகளுடன் சிறப்பு ரயில் இன்று காலை சென்னைக்கு புறப்பட்டது.
ஒடிசா பாலசோர் ரயில் விபத்தைத் தொடர்ந்து சிக்கித் தவித்த 250 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒடிசாவின் பத்ரக்கில் இருந்து சிறப்பு ரயில் சென்னைக்கு புறப்பட்டது.
இந்த சிறப்பு ரயில் C P13671 EX-BBS-MAS இன்று காலை 8:40 மணிக்குப் புறப்பட்டு, ரயில் எண் 12841-ன் அனைத்து திட்டமிடப்பட்ட நிறுத்தங்களிலும் நிறுத்தப்படும். சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளத என அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே 238 பேரின் உயிரை குடித்த ஒடிசா ரயில் விபத்தில், படுகாயமடைந்வர்களை மீட்கவும், சிகிச்சையளிப்பதற்கும் உதவ ராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கிழக்கு காமாண்டிலிருந்து ஆம்புலன்ஸ்கள், ராணுவ மருத்துவ மற்றும் பொறியியல் குழுக்கள் பல தளங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு ரயில்வே கூறுகையில், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களும், பாலசோரில் ஒரு சரக்கு ரயிலும் மோதிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்தைத் தொடர்ந்து மக்களுக்கு உதவுவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பெங்களூரு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்திலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.