கல்லூரி மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு: கேரள அரசு
மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி (நாளை) கொண்டாடப்பட இருக்கிறது. பெண்களுக்கான முக்கியத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஏற்கெனவே 100 சதவீதம் கல்வி அறிவு பெற்றுள்ள கேரள மாநிலத்தில் பாலின சமத்துவம், சீருடையில் பேதம் தவிர்ப்பது, சமூக நீதி என நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்கும் திட்டத்தை பல்கலைக்கழகங்களில் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதுதொடர்பாக கேரள பல்கலைக்கழகங்களின் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதுபோல கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாத காலம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு முடிந்து கல்லூரியில் சேரும் போது மருத்துவ சான்று சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.