ஒரேதொகுதிக்கு மட்டும் 2 நாள்கள் வாக்குப்பதிவு! இது தான் காரணமாம்!

நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணையில் கூடுதலாக ஒரு தொகுதி குறிப்பிடப்பட்டுள்ளது.

Update: 2024-03-18 05:49 GMT

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் தேதிகள் 

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் மாதம் 1ஆம் தேதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணையில் கூடுதலாக ஒரு தொகுதி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, அட்டவணையில் தேர்தல் நடத்தப்படும் தொகுதிகளை கூட்டி பார்த்தால் 544 தொகுதிகள் என வந்தது. இதனால், கூடுதலாக ஒரு தொகுதி சேர்க்கப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போதுதான்இந்தியாவில் ஒரே தொகுதிக்கு மட்டும் இரண்டு நாள்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது தெரியவந்தது,. 

அனைத்து தொகுதியிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மணிப்பூர் தொகுதிக்கு மட்டும் இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நடந்து வரும் இனக்கலவரத்தை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த தலைமை தேர்தல் ஆணையர், "அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் நிலவி வரும் சூழ்நிலையே இதற்குக் காரணம்" என்றார்.

மணிப்பூரில் மொத்தம் 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில், மணிப்பூர் தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. ஆனால், அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும் ஏப்ரல் 26ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

சுராசந்த்பூர் மற்றும் சந்தேல் மாவட்டங்கள் முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவுக்கு செல்கிறது. குக்கி மற்றும் மெய்தேய் சமூக மக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை இந்த இரண்டு மாவட்டங்களை நிலைகுலைய வைத்தது.

அவுட்டர் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஹீரோக், வாங்ஜிங் டெந்தா, கங்காபோக், வாப்காய், கக்சிங், ஹியாங்லாம், சுக்னூ, சண்டல் (எஸ்டி), சைகுல் (எஸ்டி), காங்போக்பி, சைட்டு (எஸ்டி), ஹெங்லெப் (எஸ்டி), சுராசந்த்பூர் (எஸ்டி), சைகோட் (எஸ்டி), மற்றும் சிங்கத் (எஸ்டி) தொகுதிகள் இதில் அடங்கும்.

அவுட்டர் மணிப்பூரில் மீதமுள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அவை ஜிரிபாம், தெங்னௌபால் (எஸ்டி), புங்யார் (எஸ்டி), உக்ருல் (எஸ்டி), சிங்கை (எஸ்டி), கரோங் (எஸ்டி), மாவோ (எஸ்டி), தடுபி (எஸ்டி), தமேய் (எஸ்டி), தமெங்லாங் (எஸ்டி), நுங்பா (எஸ்டி), திபைமுக் (எஸ்டி), மற்றும் தன்லோன் (எஸ்டி) ஆகும்.

Tags:    

Similar News