ஆந்திராவில் 41 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நெருப்புக்கோழி முட்டைகள்

ஆந்திராவில் 41 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நெருப்புக்கோழி முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.

Update: 2024-06-27 13:32 GMT

நெருப்புக்கோழி  முட்டை கண்டு பிடிக்கப்பட்ட இடம்.

உலகின் மிகப்பழமையான நெருப்புக்கோழியின் கூடு ஆந்திர மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 41,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான பூமியில் மனிதர்கள் சில லட்சம் வருடங்களுக்கு முன்னர்தான் தோன்றியிருக்கின்றனர். ஆனால் நெருப்புக்கோழிகள் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்த பூமியில் வாழ்ந்து வந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு காலத்தில் ஆசியா முழுவதும் பரவியிருந்த நெருப்புக்கோழிகள் தற்போது ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது. இந்த பறவையின் பூர்வீகம் என்பது அரபு நாடுகளாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர்.

இப்படி இருக்கையில் ஆந்திராவில் சுமார் 41,000 ஆண்டுகளுக்கு முந்தைய நெருப்புக்கோழியின் கூடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வாளர்களிடையே ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நெருப்புக்கோழி கூடுகளில் இதுதான் மிகவும் பழமையானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வதோதரா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசத்தில் புதைபடிமங்கள் நிறைந்த இடத்தில் ஆய்வு செய்துக்கொண்டிருந்த போது இந்த கூட்டை கண்டுபிடித்துள்ளனர். இந்த கூட்டில் 911 நெருப்புக்கோழி முட்டைகள் வரை இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

நெருப்புக்கோழிகளை பொருத்தவரை அவைகள் கூட்டு குடும்பமாக வாழும் பண்பு கொண்டது. ஒரே கூட்டில் அனைத்து நெருப்புக்கோழிகளும் முட்டைகளை இடும். இதனை பகல் நேரங்களில் பெண் பறவைகளும், இரவு நேரங்களில் ஆண் பறவைகளும் பாதுகாக்கும். உலகின் மிகப்பெரிய முட்டை நெருப்புக்கோழியினுடையதுதான் என்பதால் இதன் கூடும் பெரியதாக இருக்கும்.

சமகாலத்தில் நெருப்புக்கோழிகளின் கூடுகள் 9-10 அடி விட்டம் கொண்டதாக இருக்கிறது. இதில் 30-40 முட்டைகள் அடைகாக்கப்படுகின்றன. ஆனால், ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட கூடுகள் மிகப்பெரியதாக இருக்கிறது. எனவே இதனை ஆய்வு செய்யும்போது சுமார் 41,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நெருப்புக்கோழிகள் எப்படி இருந்திருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

நெருப்புக்கோழிகள் அதன் இறைச்சி, சிறகுகள் உள்ளிட்டவைக்காக பல்வேறு நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. சுமார் 70 கி.மீ வேகத்தில் 45 நிமிடங்கள் வரை நிற்காமல் இந்த பறவைகளால் ஓட முடியும். இதன் உணவாக இலைகள், பூச்சிகள், பாம்புகள் ஆகியவை இருக்கின்றன.

தற்போது ஆந்திராவில் உலகின் மிகப்பழமையான நெருப்புக்கோழியின் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, சர்வதேச தொல்லியல் ஆய்வாளர்களின் கவனத்தை இந்தியாவை நோக்கி திருப்பியிருக்கிறது. இந்தியாவில் உயிரியல் பூங்காக்களை தவிர வேறு எங்கும் நெருப்புக்கோழி காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News