இந்த ஆண்டு 4 கிரகணங்கள்: இந்தியாவில் எத்தனை தெரியும்?
இந்த ஆண்டு நான்கு கிரகணங்கள் நிகழவுள்ளன. முழு சூரிய கிரகணமும் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு கிரகணம் கூட தெரியாது
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் அமைந்துள்ள ஜிவாஜி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த ஆண்டு நான்கு கிரகணங்கள் நிகழவுள்ளன. முழு சூரிய கிரகணமும் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு கிரகணம் கூட தெரியாது என கூறியுள்ளனர்
இந்த ஆண்டு எப்போது, எந்த கிரகணங்கள் நிகழப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்?
உஜ்ஜைனியில் உள்ள ஜிவாஜி ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திரபிரகாஷ் குப்தா கூறியதாவது: இந்த ஆண்டின் முதல் கிரகணம் மார்ச் 25ம் தேதி நிகழும். இது பெனும்பிரல் சந்திர கிரகணம். சூரியன், பூமி மற்றும் சந்திரன் கிட்டத்தட்ட ஒரே கோட்டில் வரும்போது இந்த கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் பகல் என்பதால் இது தெரியாது.
ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதி நள்ளிரவில் முழு சூரிய கிரகணம் ஏற்படும். இரவு என்பதால், இதுவும் இந்தியாவில் தெரியாது.
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 18ஆம் தேதி காலை பகுதி சந்திர கிரகணம் ஏற்படும். இதுவும் இந்தியாவில் தெரியாது.
இதற்குப் பிறகு,வளைய சூரிய கிரகணம் அக்டோபர் 2 மற்றும் 3 ஆம் தேதி இரவு நிகழும். இது 7 நிமிடங்கள் 21 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். சூரியனின் 97 சதவீதம் கிரகணத்திற்குள் செல்லும். இது பூமியிலிருந்து ஒரு பளபளப்பான வளையல் போல் இருக்கும். ஆனால் இந்தியாவில் பார்க்கும் வாய்ப்பும் மிகக் குறைவு.
அப்படியென்றால் இந்த கிரகணம் எங்கு தெரியும்?
ஏப்ரல் 8 ஆம் தேதி முழு சூரிய கிரகணத்தின் பாதை 16 ஆயிரம் கிலோமீட்டர் நீளமும் 185 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. முக்கிய சூரிய கிரகணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சூரிய கிரகணம் கடந்து செல்லும் நீண்ட பாதையில் 3.1 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இந்த பாதை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் மட்டுமே முடிவடையும்.
இந்த சூரிய கிரகணம் தெரியும் பத்து நகரங்கள். அவை மாண்ட்ரீல், சான் அன்டோனியோ, டல்லாஸ், ஆஸ்டின், ஃபோர்ட் வொர்த், இண்டியானாபோலிஸ், டுராங்கோ, ஹாமில்டன், டோரியான் மற்றும் மசாட்லான்.