இ-பைலிங் தளத்தில் 3 கோடிக்கும் அதிகமான வருமானவரி ரிட்டர்ன்கள் தாக்கல்
இதுவரை வருமான வரி ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யாதவர்கள் விரைந்து தாக்கல் செய்ய வருமான வரித்துறை அறிவுறுத்தல்.
வருமான வரித்துறையின் புதிய இ-பைலிங் தளத்தில் 3 கோடிக்கும் அதிகமான வருமான வரி ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன; இதுவரை தாக்கல் செய்யாதவர்கள் விரைந்து தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
2021 டிசம்பர் 3-ம் தேதி நிலவரப்படி, 3 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் புதிய இ-பைலிங் தளத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு தாக்கலாகும் ஐடிஆர் கணக்குகளின் எண்ணிக்கை 4 லட்சம் ஆகும். டிசம்பர் 31 நெருங்கி வரும் நிலையில், நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கு ஐடிஆர் தாக்கல் 3.03 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், ஐடிஆர்1 -58.98% , ஐடிஆர்2-8%, ஐடிஆர்3-8.7%, ஐடிஆர்4-23.12%. நவம்பரில், 48% ஐடிஆர்கள் சரிபார்க்கப்பட்டு, 82.80 லட்சம் கணக்குகளுக்கு ரிபண்ட் தொகை அனுப்பப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர், தாமதமின்றி ரீபண்ட் பெற, தங்கள் வங்கி கணக்குடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் தாமதமின்றி கணக்குகளை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டு, வரி செலுத்துவோரின் மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் மூலமாக வருமான வரித்துறை தகவல்களை பகிர்ந்து வருகிறது. இதுவரை தங்கள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில், உடனடியாக அவற்றைத்தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.