பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு 2 நாட்கள் அரசு துக்கம்: மத்திய அரசு
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவைத் தொடர்ந்து, ஏப் 26 27 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.;
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்
ஏப்ரல் 25 அன்று இறந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 26 முதல் 27 வரை இரண்டு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும், தேசியக் கொடி வழக்கமாக பறக்கவிடப்படும் அனைத்து கட்டிடங்களிலும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், மேலும் இந்த இரண்டு நாட்களுக்கு அதிகாரப்பூர்வ நிகழ்சிகள் எதுவும் இருக்காது.
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும், சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் தனது 95வது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்து உள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரதுஇறுதிச் சடங்குகள் பதிண்டாவின் பாதல் கிராமத்தில் நடைபெறும்.
பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாபின் முதல்வராக 1970-71, 1977-80 மற்றும் 2007-2017 வரை பதவி வகித்தார். அவருக்கு மனைவி சுரிந்தர் கவுர் பாதல், மகன் சுக்பீர் சிங் பாதல் மற்றும் மருமகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் உள்ளனர்.