குஜராத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி

Update: 2024-01-19 04:37 GMT

குஜராத்தின் வதோதராவில் உள்ள ஹர்னி மோட்நாத் ஏரியில் வியாழக்கிழமை சுற்றுலா வந்த பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “குஜராத்தில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

பல மாணவர்கள் மாயமாகியுள்ளனர். குஜராத் அரசு நிர்வாகம் மீட்பு பணிகளை விரைந்து செய்து, மாணவர்களின் உயிரைக் காக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வதோதரா எம்.பி. ரஞ்சன்பென், “மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.

இந்நிலையில், வதோதரா படகு விபத்து தொடர்பாக 18 பேர் மீது குஜராத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News