இந்தியக் கடலோரக் காவல் படையின் 45வது ஆண்டு

Update: 2021-02-01 03:37 GMT

இந்தியக் கடலோரக் காவல் படை உருவாகி, 44 ஆண்டுகள் நிறைவடைந்தது, 45வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடுகிறது.

இது குறித்து, இந்தியக் கடலோரக் காவல் படை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியக் கடலோரக்காவல் படை, தன், 45வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடுகிறது. 1978ல், ஏழு தளங்களுடன் துவங்கப்பட்ட இந்தப் படை, தற்போது, 156 கப்பல்கள், 62 விமானங்களுடன், ஒரு வலுவான படையாக வளர்ந்துள்ளது. வரும், 2025க்குள், 200 தளங்கள் மற்றும், 80 விமானங்களை பெற, இலக்கு நிர்ணயித்துள்ளது.

உலகின் நான்காவது பெரிய கடலோரக் காவல் படையாக, இந்தியக் கடலோரக் காவல் படை உள்ளது. இந்தியக் கடலோரப் பகுதிகளை பாதுகாப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும், இந்திய கடல்சார் மண்டலத்தில் விதிமுறைகளை அமல்படுத்தி, 'நாங்கள் பாதுகாக்கிறோம்' என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன; 14 ஆயிரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலின் போதும், 24 மணி நேர தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 50 கப்பல்கள் மற்றும், 12 விமானங்கள், தினமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.ஒருங்கிணைந்த கண்காணிப்பு நடவடிக்கையால், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கடந்த, 2020ல் மட்டும், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அத்துமீறி நுழைந்த, 10 வெளிநாட்டு மீன்பிடி படகுகளுடன், 80 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

Similar News