பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவி
கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி பிரதமர் மோடி “பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தை” தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விளைநிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 தொகையினை மூன்று சம தவணைகளாக ரூ.2000 வீதமாக பிரித்து விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டது.;
தற்போது பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் படி, இந்த ஆண்டின் மூன்றாவது தவணையாக, ஒன்பது கோடி விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. பிரதமர் நரேந்திர மோடி உதவித்தொகை வழங்குவதை துவக்கி வைத்து, ஆன்லைன் மூலம் விவசாயிகளுடன் கலந்து பேசினார்.
விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பணியினை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணிக்கு துவங்கி வைத்து , 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி ஒடிசா மாநில விவசாயிகளிடம் கலந்துரையாடிய போது , கிசான் கிரெடிட் கார்டு மற்றும் அதன் மூலம், குறைந்த வட்டியில் கடன் வாங்கும் வசதிகளை பற்றி கேட்டறிந்தார், அதற்கு பதிலளித்த விவசாயி கூறுயதாவது, 2019ம் ஆண்டு கிசான் கிரெடிட் கார்டு வாங்கினேன். அதன் மூலம் 4 சதவீத வட்டியில், 27 ஆயிரம் கடன் வாங்கினேன். இது இடைத்தரகர்களிடம் வழங்கும் வட்டியை விட 20 சதவீதம் குறைவாக உள்ளது என்றார்.
கொரோனா ஊரடங்கு, தொழில் முடக்கம், காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்த விவசாயிகளுக்கு ஆறுதல் தருவதாக இந்த நிதியுதவி இருக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.