உச்சநீதிமன்ற விசாரணைகளை ஒளிபரப்பும் சாத்தியங்கள் - தலைமை நீதிபதி தகவல்
சக நீதிபதிகளின் ஒருமித்த கருத்து கிடைத்தபிறகு சாத்தியம்.
உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பும் சாத்தியங்களை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் காணொலி நிகழ்ச்சிகளில் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்வதற்கான செயலி அறிமுகப்படுத்தும் விழாவில் தலைமை நீதிபதி ரமணா கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், ''அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளனாக இருந்தவன் என்பதால், சக பத்திரிகை நண்பர்களின் கஷ்டத்தை அறிவேன். நீதிமன்றம் சார்ந்த செய்திகளை சேகரிப்பதற்கு வழக்கறிஞர்களை சார்ந்தே இருக்க வேண்டும். இதுபோன்ற சிரமங்களை தவிர்ப்பதற்காகவே செல்போன் செயலியும், பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும் உச்சநீதிமன்ற இணையதளம் மூலம் தேவையான தகவல்களைப் பெறலாம். நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக நேரடி ஒளிபரப்பு பற்றியும் திட்டமிட்டு வருகிறோம்.
சக நீதிபதிகளின் ஒருமித்த கருத்து கிடைத்தபிறகு இதற்கான பணிகள் தொடங்கும்'' என்று தெரிவித்துள்ளார்.