கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகள் ஏற்றுமதி கழகத்தை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய ஜவுளி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகள் ஏற்றுமதி கழகத்தை மூடுவதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த கழகத்தில் 59 நிரந்தர ஊழியர்களும், 6 மேலாண்மை பயிற்சியாளர்களும் பணியாற்றுகின்றனர். அனைத்து நிரந்தர ஊழியர்களுக்கும் மேலாண்மை பயிற்சியாளர்களுக்கும் பொது நிறுவனங்கள் துறை வெளியிட்டுள்ள விதிகளின்படி விருப்ப ஓய்வு திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
செயல்படாத மற்றும் வருமானம் ஈட்டாத, நலிவடைந்த மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசு கருவூலத்திலிருந்து செலவாகும் ஊதியத் தொகையைக் குறைக்க இந்த அனுமதி ஏதுவாக இருக்கும்.
நிதியாண்டு 2015-16 முதல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் இந்த கழகம் தனது அன்றாட செலவுகளுக்குத் தேவையான போதுமான வருமானத்தையும் ஈட்டவில்லை. இந்த கழகம் மீண்டு வருவதற்கு மிகக்குறைந்த சாத்தியக் கூறுகளே இருப்பதால், இந்த நிறுவனத்தை மூடுவது அவசியமாகிறது.