தகுதியான தலைவர்களையும், மாவீரர்களையும் கவுரவிக்காத வரலாற்றுப் பிழைகளை நாங்கள் சரிசெய்கிறோம் என பிரதமர் மோடி கூறினார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் மகாராஜா சுகல்தேவ் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டி, பஹ்ராச்சில் சித்துவாரா ஏரி மேம்பாட்டு பணியைத் தொடங்கி வைத்து பிரதமர்மோடி பேசியதாவது,இந்தியாவுக்காக தங்களின் அனைத்து விஷயங்களையும் தியாகம் செய்தவர்களுக்கு வரலாற்றுப் புத்தகங்களில் உரிய பங்கு அளிக்கப்படவில்லை.இந்தியாவின் வரலாற்றை உருவாக்கியவர்கள் பற்றிய தகவல்களை சரியாக பதிவு செய்யாமல், இந்திய வரலாற்றுப் பதிவாளர்கள் இழைத்த அநீதி, சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டில் நாம் நுழையும் இத்தருணத்தில் சரி செய்யப்படுகின்றது. மாவீரர்கள் பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு வரலாற்றில் உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளதா என்று ஆசாத் கேள்வி எழுப்பினார். 500-க்கும் மேற்பட்ட சமஸ்தான அரசுகளை ஒன்று சேர்த்த சர்தார் வல்லபாய் படேலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்பதும் நன்கு தெரிந்ததாகவே உள்ளது. இன்றைக்கு ஒற்றுமைக்கான சிலை என்ற வகையில் சர்தார் பட்டேலின் சிலை தான் உலகிலேயே மிக உயரமான சிலையாக உள்ளது.
பல்வேறு காரணங்களால், உரிய அங்கீகாரம் பெறாத எண்ணற்ற தலைவர்கள் உள்ளனர். சௌரி சௌராவில் துணிச்சல் காட்டியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிட முடியுமா?இந்தியாவின் தனித்தன்மையைப் பாதுகாப்பதற்காக சுகல்தேவ் மகாராஜா மேற்கொண்ட பங்களிப்பும் மறக்கப்பட்டுவிட்டது. பாடப் புத்தகங்களில் இடம் பெறாவிட்டாலும், சுகல்தேவ் மகாராஜா பற்றிய தகவல்கள் அவத், டராய், பூர்வாஞ்சல் நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளன என்றார்.