தடுப்பு மருந்து இருக்கும் காரணத்தால் நாம் அலட்சியத்துடன் இருந்து விடக்கூடாது என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தியுள்ளார்.
முகக்கவசங்கள் மற்றும் சோப்புகள் ஆகியவற்றை பல்வேறு போக்குவரத்து சங்கங்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்புமருந்து இருக்கும் காரணத்தால் நாம் அலட்சியத்துடன் இருந்து விடக்கூடாது என்றும், தற்போதும், இனி வரும் காலத்திலும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.
ஒட்டுமொத்த உலகத்திலேயே கொரோனா குணமடைதல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து 1.48 லட்சம் என்னும் அளவில் தற்போது உள்ளது என்றும் ஹர்ஷ்வர்தன் கூறினார்.