கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு வதந்திகளும் பரப்பபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான மறு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஹர்ஷவர்தன், நேற்றைய தினம் நாட்டுக்கு மிகவும் முக்கியமான நாள் என்றார்.
விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு முன்வந்த அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்பும் 10 மாத காலத்திற்குள் நிர்வாகத்திற்கு இரண்டு தடுப்பூசிகள் தயாராக இருப்பதை உறுதி செய்துள்ளன என்ற அவர்,கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.