உலக ஆரோக்கியத்தின் மையம் இந்தியா : பிரதமர் மோடி பெருமிதம்

Update: 2020-12-31 12:16 GMT

உலக ஆரோக்கியத்தின் மையமாக இந்தியா உருவாகி வருகிறது என பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியின் போது கூறினார்.

குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் காணொலி மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர், கொரோனா காலத்தில் பொது மக்களைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்து முன்களத்தில் நின்று பணியாற்றி வரும் 9 மில்லியன் டாக்டர்கள், சுகாதார அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.

இந்தியா ஒன்றுபட்டு நின்றால் மிக மோசமான நெருக்கடிகளையும் திறமையாக சமாளிக்க முடியும் என்பதை இந்த ஆண்டு நிரூபித்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் சுகாதாரக் கட்டமைப்பு, மருத்துவக் கல்வி வசதிகள் பெருகுவதுடன், குஜராத்தில் வேலைவாய்ப்புகளும் பெருகும் என்று மோடி கூறினார். நேரடியாக 5 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக அதே அளவிலும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார்.

நோய்கள் இப்போது உலக அளவில் பரவும் நிலையில், உலக அளவில் சுகாதாரத் தீர்வுகள் காண்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தேவைக்கு ஏற்ப தீர்வுகளை அளித்து இந்தியா தனது செயல்திறனை நிரூபித்துள்ளது. உலக ஆரோக்கியத்தின் மையமாக இந்தியா உருவாகி வருகிறது. 2021ல் நாம் இதை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News