விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது - மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா்
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது, விவசாயிகளின் சந்தேகங்களை தீர்க்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய நிதித்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குா் கூறினார்.;
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று பஞ்சாப், ஹரியாணா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தேசத்தின் தலைநகர் டெல்லியின் எல்லையில் பல நாட்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8 ஆம் தேதி விடுத்த `பாரத் பந்த்' போராட்டத்திற்கு பல்வேறு விவசாய அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.
தலை நகரில் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசு ஐந்து கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும் போராட்டம் முடிவடைய வில்லை. மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன.
நாடாளுமன்றத்தைக் கூட்டி 3 வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
இந்தச் சட்டங்களைப் பார்த்து விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என்று கூறிய மதிய அரசு, அந்த சட்டங்களை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய பகுதிகளைத் திருத்தம் செய்ய தயார் என கூறியது.
3 சட்டங்களையும் முழுமையாக திரும்பப்பெற்ற பின்னரே, அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று கூறி விவசாயிகள் கடும் குளிருக்கு மத்தியில் போராட்டத்தைத் தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையில், மத்திய அரசு உறுதியான திட்டத்தோடு முன்வந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கத்தினர் கடந்த 23 ஆம் தேதி அறிவித்தன.
இதை பற்றி மத்திய நிதித்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குா் கூறியதாவது , "புதிய விவசாய சட்டங்களுக்கு பல விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம். போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிய அரசு தயாராக உள்ளது, விவசாயிகளின் சந்தேகங்களை தீர்க்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வைக் காண முடியும்" என்று கூறினார்.