அரசு வேலையா..? தனியார் வேலையா..? சுய தொழிலா..? B.A.,இளங்கலை படீங்க..!
இளங்கலை படித்தால் எத்தனை வேலை இருக்கு பாருங்கள். எல்லாம் உங்கள் முயற்சியிலும், உழைப்பிலும்தான் இருக்கு.;
ஓகே,கைஸ் இன்னிக்கு, நேற்றைய விளக்கங்களின்படி முதலில் இளங்கலை படிப்புகள் குறித்தும் வேலை மற்றும் சம்பள விபரங்கள் குறித்தும் பாப்போம் கைஸ்.
1. பிஏ (இளங்கலை -கலை-Arts )
பி.ஏ. இளங்கலை (ஆர்ட்ஸ்)கலையை குறிக்கிறது. பல ஆர்ட்ஸ் ஸ்ட்ரீம் மாணவர்கள் தொடர்ந்து படிக்கும் படிப்புகளில் இதுவும் ஒன்றாகும். இளங்கலை 3 ஆண்டு படிப்பாகும்.
இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பதன் முதல் நன்மை, இளங்கலைப் படிப்பை எளிதாக படிக்க முடியும் என்பதுதான். பல அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள். எனவே, உங்கள் இலக்கு அரசு வேலையாக இருந்தால், இந்தப் படிப்பைத் தொடரலாம். பட்டம் ஒன்று வாங்கிவிட்டு தனித்திறமையால் அரசு வேலை பெற கடினமாக உழைக்கத் தயார் என்றால் பிளஸ் 2 முடித்தவுடன் இளங்கலை படிக்கலாம்.
இன்னொரு நன்மை கல்லூரிகள் எளிதாகக் கிடைக்கும். ஆம்,தமிழகம் முழுவதும், பல அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.ஏ. இளங்கலை நிச்சயமாக இருக்கும். எனவே, ஒருவர் தனது சொந்த இடத்தை விட்டு வெளியேறாமல் உள்ளூரிலேயே படிப்பைத்தொடர இளங்கலை ஒரு அற்புத வாய்ப்பாக அமையும்.
பி.ஏ.முடித்த பின் எம்.ஏ.வும் படிக்கலாம். முதுகலை படிக்கும்போது ஒருவரின் திறமை மற்றும் வேலைக்கான மதிப்பும் உயர்கிறது. பி.ஏ. பட்டதாரிகள் வங்கிகள், ஆயுதப்படை, போலீஸ் படை, நிர்வாக அலுவலகம், பள்ளிகள் போன்ற அரசுத் துறை வேலைகளை பெறலாம். அவர்கள் தனியார் துறை வேலைகளான கணக்காளர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் போன்ற வேலைகளுக்கும் செல்லலாம்.
BA இளங்கலை பாடத்திட்டத்தில் உள்ள முக்கியமான பிரிவுகள் :
- தமிழ் மொழி
- ஆங்கில மொழி
- வரலாறு
- பொருளாதாரம்,
- சமூகவியல்
- இந்திய கலாச்சாரம்
- அரசியல்,
- புவியியல் போன்ற மேலும் பல பாடப்பிரிவுகள் உள்ளன.
BA வேலைகள், & சம்பளம்:
பி.ஏ என்பது பொது இளங்கலைப் பட்டம். இந்தப் படிப்பை முடித்த பிறகு, பட்டதாரிகளுக்கு அரசுத் துறை வேலைகள், தனியார் வேலைகள் மற்றும் சுய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். UPSC மற்றும் மாநில TNPSC வாரியங்கள் பல பதவிகளுக்கு இளங்கலை பட்டத்தை குறைந்தபட்ச தகுதியாக வரையறுத்துள்ளன. இதேபோல், பல அரசு வங்கிகளும் இளங்கலை பட்டம் பெற்றவர்களை அதிகாரி நிலைக்கு பணியமர்த்துகின்றன.
சுருக்கமாக, BA பட்டதாரிகளுக்கான அரசாங்க வேலை வாய்ப்புகளில் - சிவில் சர்வீசஸ், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், இந்திய ரயில்வே, முனிசிபல் கார்ப்பரேஷன்கள், கிராம அலுவலகங்கள் மற்றும் பல. தனியார் வேலை வாய்ப்புகள் போன்றவை அடங்கும். அதேபோல தனியார் வங்கிகள், MNCகள், நிதி நிறுவனங்கள், IMPEX நிறுவனங்கள், சில்லறை வணிக நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை. தனியார் நிறுவனங்களில், BA பட்டதாரிகளை அலுவலகம் சார்ந்த மற்றும் எழுத்தர் வேலைகளுக்கு பணியமர்த்துகின்றன. அவர்களின் பணி பொதுவாக கோப்பு மேலாண்மை, பதிவுகள் மேலாண்மை, கணக்குகள் மேலாண்மை போன்றவற்றை உள்ளடக்கியது.
ஆரம்ப சம்பளம் - நிறுவனத்தின் பின்புலம், வேலையின் வகை (அரசு அல்லது தனியார்), வேலை இடம் போன்ற காரணிகளைப் பொறுத்து சம்பளம் அமைகிறது. அரசுப் பணி என்று வரும்போது, பணியாளரின் தரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். சராசரியாக, தொடக்கச் சம்பளம் (தனியார்) மாதத்திற்கு ரூ.10ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரை இருக்கலாம். (இன்னும் பேசுவோம்)
வேலைக்கு என்ன படிப்பு என்பது முக்கியமில்லைங்க..திறமைதான் முக்கியம்..!