JKKN வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்
குமாரபாளையம், JKKN வித்யாலயா பள்ளியில் வறுமை ஒழிப்பு குறித்த மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது.;
JKKN வித்யாலயா பள்ளியில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் 6ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் முதல்வர் ரம்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் "வறுமையின்மை" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவன் ஜிஷ்ணு மக்கள் தொகை பெருக்கம், சமுதாய கட்டமைப்பு,ஜாதி பாகுபாடு, பெண்களின் நிலை ஆகிய தலைப்புகளில் வறுமைக்கான காரணங்களை தெளிவாக விளக்கினார். சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கும், பெண்களுக்கும் அதிக வேலை வாய்ப்பு அளிப்பதன் மூலமாக வறுமையை ஒழிக்கலாம் எனவும் கூறினார்.
மாணவன் தரணீஷ் வறுமைக்கு எதிரான அமைப்பு பிரான்சில் முதன் முதலில் தொடங்கியது எனவும் இவ்வமைப்பு பிரெஞ்சு நாட்டில் உள்ள எழுத்தாளர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்களால் தொடங்கப்பட்டது எனவும் கூறினார். தற்பொழுது 5 நாடுகளில் அந்த அமைப்பின் தலைமையிடங்கள் செயல்பட்டு வருகிறது எனவும் அவற்றின் பணிகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து, தூய்மையான குடிநீர் வழங்குதல், நல்ல திட்டங்களை பரிந்துரை செய்தல் ஆகியவை ஆகும் என ஆழமாக விளக்கிக் கூறினார்.
இவ்விழாவில் 70க்கும் மேட்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும்,பள்ளி இருபால் ஆசிரியர்கள் பெருந்திரளான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் புத்தகக் கல்வி மட்டுமல்லாமல் உலகளாவிய கல்வியையும், தன்னம்பிக்கையையும் கற்றுக் கொள்கின்றனர் என்பாதை பெற்றோர் நேரில் கண்டறியும் வாய்ப்பு ஏற்பட்டது. பெற்றோர் தங்களது மகிழ்ச்சியினையும் பாராட்டுகளையும் பகிர்ந்து கொண்டனர்.