குமாரபாளையம், ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களில் விக்கிமீடியா குறித்த 3 நாள் கருத்தரங்கு
ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர்களுக்கான விக்கிமீடியா குறித்த 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
குமாரபாளையம், ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர்களுக்கான "விக்கிமீடியா இயக்கத்தின் அறிமுகம்" என்ற தலைப்பில் 3 நாள் இணையவழிக் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கு ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரையிலான 3 நாட்கள் யூடியுப் வாயிலாக நேரலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம்சரவணா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், 2010 முதல் விக்கிமீடியாவின் தன்னார்வலராக விளங்கும் ராஜாராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இவர் "மென்கோலம்" என்ற தமிழ் வரைகலை செயலி தொடங்கி, "வாணி" சந்திப்பிழை திருத்திவரை 10க்கும் மேற்பட்ட தானியங்கி செயலிகளை உருவாக்கியவர் ஆவார். 2019ம் ஆண்டுக்கான முதலமைச்சர் "கணினித் தமிழ் விருது" பெற்றவர். மதுரையைச் சேர்ந்த இவர் "நீச்சல்காரன்' என்ற புனைப்பெயர் கொண்டவர்.
முதல் நாள் (24ம் தேதி) கருத்தரங்கில் 'திறந்த அறிவை உருவாக்குதல்' என்ற தலைப்பில் விக்கிமீடியா இயக்கம், திறந்த உரிமம், விக்கிபீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கி காமன்ஸ், விக்கி தரவு, தமிழ் விக்கி சமூகம் ஆகியவை குறித்து, ராஜாராம் மற்றும் சேலத்தை சேர்ந்த விக்கிமீடியா பங்கேற்பாளர் புவனா மீனாட்சி ஆகியோர் விளக்கமளித்தனர்.
2ம் நாள் (25ம் தேதி) 'விக்கிபீடியாவை உருவாக்குதல்' என்ற தலைப்பில் விக்கிபீடியா பங்களிப்பு, விக்கிபீடியாவின் கொள்கைகள், விக்கிபீடியா கருவிகள், தமிழ் விக்கிபீடியா, மீடியாவிக்கி மென்பொருள் போன்றவை குறித்து ராஜாராம் விரிவாக விளக்கமளித்தார்.
3ம் நாள் (26ம் தேதி) 'விக்கிமீடியாவில் சமூக கட்டமைத்தல்' என்ற தலைப்பில் இந்திய விக்கிமீடியா செயல்பாடுகள், விக்கிமீடியா ஏற்படுத்திய கல்வியின் தாக்கம், நிறுவன ஒத்துழைப்பு, பிற விக்கி கிளப்புகள் மற்றும் பயனர் குழுக்கள் ஆகியன குறித்து விக்கிபீடியா பங்களிப்பாளர்களான சுபோத் குல்கர்னி, ஜெயந்தா நாத், அஷ்லின், மற்றும் கௌரவ் ஜம்மத் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் தொலை தொடர்பு மேலாளர் நாசர்கான் செய்திருந்தார். கருத்தரங்கின் இறுதியில், ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரியின் முதல்வர் சம்பத்குமார் நன்றி கூறினார்.
இந்த கருத்தரங்கில் ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவன கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சார்ந்த பல்வேறு துறைகளின் தலைவர்களும், பேராசிரியர்களும், ஆசிரிய, ஆசிரியைகளும் பங்கேற்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயனடைந்தனர்.