குட்டிப்பேயும் அம்மா பேயும்..! (திகில் கதை)
பயம் என்பது மனதில் மட்டுமே உள்ளது என்பதற்கு இந்த கதை நல்ல உதாரணமாக இருக்கும். நீங்களும் இந்த கதையை படித்தால்.."ஓ..அப்டியா?" என்பீர்கள்.;
Pei Kathaigal
ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.
இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.
Pei Kathaigal
மனைவி இறந்ததை அந்த மனிதனால் தங்கிக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.
அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.
Pei Kathaigal
மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.
அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.
அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் “அம்மா... அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா....“ என்று சொன்னது.
அதற்கு அம்மா பேய்.... “வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்“ என்றது.
Pei Kathaigal
இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை. “எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் “ என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.
உம்ம்ம்... எதற்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.
அப்படியே கொஞ்ச காலம் ஓடிவிட்டது. மனைவியை இழந்து வாடிய இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் கூறியதைக்கேட்டு தன் மகனைக் காரணம் காட்டி இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
Pei Kathaigal
ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாட்டைத் தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அந்த வழியே போய்க் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்... “தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாலி இவன் தான்“ என்றது.
அதற்கு அம்மா பேய்... “அவன் தைரியசாலி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார்“ என்றது.
குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது. அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உளறி நடுங்கிப் போய் தலைதெறிக்க ஓடிப் போனான்.
Pei Kathaigal
குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து... “அன்றைக்கு தான் எனது முழு சக்தியைக்காட்டி பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான் சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்..?“ என்று கேட்டது.
இதற்கு அம்மா பேய், “மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று மனதில் வருந்துகிறான்.
Pei Kathaigal
அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும்“ என்று விளக்கம் கூறியதால்.
குட்டிப்பேயும் " ஓ..அப்படியாம்மா..?" என்று சிந்தனையாக தலையை ஆட்டியது.
(உண்மை தானா...?)