JKKN பல் மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
குமாரபாளையம், JKKN பல் மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்புவிழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 31வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள JKKN கல்வி நிறுவன அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் மருத்துவர். இளஞ்செழியன் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் சாதனைகளை எடுத்துரைத்தார். விழாவிற்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா மற்றும் ஐஸ்வர்யலக்ஷ்மி ஓம்சரவணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஓம்சரவணா சிறப்புரை ஆற்றுகையில், "நவீன தொழில்நுட்பங்களால் புதிய மாற்றங்களானது, பழங்கால மாற்றங்களைக் காட்டிலும் விரைவாக நடைபெறுகின்றன. இவற்றை மாணவ, மாணவியர்கள் கருத்தில் கொண்டு, தங்களின் உருவாக்கும் திறனை பெருக்கிக் கொள்வதோடு, நவீன காலத்திற்கேற்ப அவர்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
மேலும் பட்டம் பெற்றவுடன் பல் சிகிச்சை மையம் நடத்தும் அளவிற்கு நவீன தொழில்நுட்ப பல்மருத்துவ அறிவினை பெற்றிருக்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக சேலம், லண்டன் ஆர்த்தோ சிறப்பு மருத்துவமனையின் தலைமை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். சுகவனம், கலந்து கொண்டு, சமுதாயத்தில் பல் மருத்துவத் துறையின் முக்கியத்துவம் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார்.
அப்போது அவர்,மருத்துவப் பயிற்சியில் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட வேண்டும் என்றும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் இன்றையகாலப் பெண்கள் கல்விப் பணிகள், ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் தங்கள் வீட்டுப் பணிகளை ஒரே நேரத்தில் நிர்வகிக்கும் திறன் பெற்றவர்களாக உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இன்றைய இளைஞர்கள் படித்து பட்டம் பெற்று விட்டோம் என்று இல்லாமல் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் வெளிநாட்டில் வேலை தேடுவதைவிட நம் தேசத்திற்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்று அனைத்து பட்டதாரிகளுக்கும் வேண்டுகோள்விடுத்து பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவரது வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் விழாவில் பங்கேற்ற இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார். இறுதியில், JKKN பல் மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வர் மருத்துவர்.கவின் நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.