JKKN பல் மருத்துவக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிகழ்ச்சி
குமாரபாளையம், JKKN பல் மருத்துவக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரியின் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில்(IIC), மற்றும் EDII தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மூலமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு, படைப்பாற்றல் சிந்தனை மற்றும் தொழில் முனைவோருக்கான ஆற்றல் போன்றவை வளரும். இந்த புத்தாக்க நிகழ்ச்சி JKKN கல்லூரி வளாகத்தில் உள்ள செந்தூர் ராஜா அரங்கத்தில் நடைபெற்றது.JKKN பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் இளஞ்செழியன் மற்றும் துணை முதல்வர் மருத்துவர் கவின் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உரை ஆற்றினார். அவர் பேசும்போது, ' தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் முன் முயற்சிகள் மற்றும் திட்டங்களை JKKN கல்வி நிறுவனம் ஆதரிக்கும். என்று உறுதியளித்த அவர் மேலும் தொடர்கையில் 'அறிவுசார் காப்புரிமைகள், புதிய தயாரிப்புகளை பதிவு செய்ய வலியுறுத்தினார். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் வாய்ப்புகளுடன் உயர் நிலையை அடைய வேண்டும்.' இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன சேலம் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கௌதம் மற்றும் கோயம்புத்தூர் மண்டலம் 4ன் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதில் வழங்கப்படும் நிதி உதவிகள் குறித்து விவரித்தனர். மாணவர்களுக்கு தொழில் முனைவோருக்கான ஆலோசனை கிடைக்கும் வகையில் அவர்கள் படித்து முடித்ததும் தொழில் முனைவோர்களாக உருவாகும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டினர்.
JKKN பல் மருத்துவக் கல்லூரியின் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில்(IIC) ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.தினேஷ்குமார் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அவரே நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பல் மருத்துவக்கல்லூரி, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை என மாணவ,மாணவிகள் மொத்தம் 200 பேர் மற்றும் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.