என்ன படிக்கலாம்? வாங்க பார்க்கலாம்! பார்மஸி படிங்க..! பக்காவா செட்டில் ஆகலாம்..!
பார்மஸி படிப்புக்கு எக்கச்சக்க வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. பயன்படுத்தும் ஆற்றல் உங்க கையில்தான் இருக்கு.
'ஹல்லோ என்ன ரொம்ப நேரமா தனியா ஏதோ புலம்பிக்கொண்டே இருக்கீங்க? '
நீங்க யாருங்க?
நான் யாராவே இருக்கட்டுங்க. உங்களுக்கு வழிகாட்ட முடிஞ்சா செய்யறேன். இல்லன்னா ஆளைவிடுங்க.போயிடுறேன்.
நான் என்ன படிக்கறதுன்னு குழப்பத்தில் இருக்கேங்க. அதுதான் புலம்பிக்கிட்டிருக்கறேன்.
ஓ..இதுதானா..?
என்னங்க..நானே புலம்பறேன். நீங்க இதுதானான்னு சாதாரணமா சொல்றிங்க.
அட..விடுங்க தம்பி..நான் உங்களுக்கு வழி சொல்றேன்.
அப்பிடியா..சொல்லுங்க..சொல்லுங்க..
பார்மஸி படீங்க.
பார்மஸியா?
விபரமா சொல்றேன் கேளுங்க..
பார்மஸி படித்தால் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அரசு வேலை பெறலாம். தனியார் மருத்துவமனைகளில் பார்மசிஸ்ட்- ஆக பணியாற்றலாம். ஏன்? இன்னும் சொல்லப்போனால் நீங்களே சொந்தமாக மெடிக்கல் ஷாப் வைக்கலாம்.
முதல்ல பார்மஸி என்றால் என்ன என்று பார்ப்போம்.
பார்மஸி என்பது மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தைக் கையாளுகின்ற சுகாதார அறிவியலின் ஒரு பிரிவு ஆகும். மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்வதே இதன் நோக்கம். பார்மசிஸ்ட் என்பவர்கள் மருந்தியலில் நிபுணர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள். அவர்கள் மருந்துகளில் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் திறமை பெற்றவர்கள். நோயாளிகளின் நலனுக்காக அவர்கள் மருந்துகளைப் பற்றிய அறிவைப் பயன்படுத்துபவர்கள்.
மருந்தியல் துறையை பொறுத்தவரை மூன்று துறைகளாகப் பிரிக்கலாம்:
1. மருந்தியல்
2. மருத்துவ வேதியியல் & மருந்தியல்
3. பார்மசி பயிற்சி
உலகம் முழுவதும் சுமார் 2.6 மில்லியன் பார்மசிஸ்ட் மற்றும் பிற மருந்துப்பணியாளர்கள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தகவல் தெரிவித்துள்ளது. பார்மஸி படிப்பு வாரியாக சில கீழே தரப்பட்டுள்ளன.
இளநிலை படிப்புகள் :
Diploma in Pharmacy (D.Pharm) – 2 years
Bachelor of Pharmacy (B.Pharm) – 4 years
Bachelor of Pharmacy (B.Pharm) Lateral Entry – 3 years
முதுநிலை படிப்புகள் :
Master of Pharmacy (M.Pharm) – 2 years
Pharm.D (Post Baccalaureate) – 3 years
Doctor of Pharmacy (Pharm.D) – 6 years
ஆராய்ச்சி படிப்பு :
Ph.D. in Pharmaceutical Sciences – 3 years
இப்படி பார்மஸி பல்வேறு வகைகளில் பரந்து விரிந்த படிப்பாக உள்ளது. அதேபோல அதற்கான வேலை வாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன. இன்று பார்மஸி அல்லது மருத்துவ படிப்பு முடித்தவர்கள் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக கிடையாது. பார்மஸி பட்டம் பெற்றவர்கள் நிச்சயமாக ரூ.15ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்.
நல்ல கல்லூரி :
பார்மஸி படிப்பதற்கு ஒரு சிறந்த கல்லூரியை தேர்வு செய்வதே மாணவர்களின் சிறப்பை உணர்த்தும். எப்படி படிக்கிறோம் என்பதைவிட எங்கு படிக்கிறோம் என்பது இப்போது முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கேம்பஸ் தேர்வில் கூட நல்ல நிறுவனங்கள் உங்களை வேலைக்கு அள்ளிச் சென்றுவிடுவார்கள். அதற்கு ஒரு சிறந்த கல்லூரியை தேர்வு செய்வதே, உங்களுக்கான வாய்ப்புகளின் கதவுகள் எனலாம்.
'ஹலோ..ஹல்லோ.. கொஞ்சம் நில்லுங்க... ஓடாதீங்க..!
'வேணாம்..நான் நிக்க மாட்டேன். பார்மஸி படிக்கணும்.'
'ஒகே..ஒகே.. வாழ்த்துக்கள்.'