சிறையில் பெண் கைதி தற்கொலை! என்ன நடந்தது?
புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சென்னை புழல் சிறையில், நகை திருட்டு வழக்கில் கைதான பெண் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறையில் கடந்த சில நாட்களாகவே மிகுந்த சோகத்துடன் இருந்த அவர் திடீரென்று இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சென்னை புழல் சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள், அவர்கள் செய்த குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை கிடைக்கப் பெற்று, சிறையில் கைதியாக அடைந்து கிடக்கின்றனர். இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி மாநகரின் ஜீயபுரத்தில் மூதாட்டியை கொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காந்திமதி எனும் பெயருடைய 50 வயது பெண் நகைகளுக்காக அப்பாவி மூதாட்டியைக் கொன்றுவிட்டு கொள்ளையடித்து சென்றிருக்கிறார்.
இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மீனாட்சி என்ற காந்திமதி கைது செய்யப்பட்டார். இவருக்கு உறவினர்கள் யாரும் பார்க்கவரவில்லை என்றாலும், இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இவருக்கு ஜாமின் கொடுக்கலாம் என்றாலும் உறவினர்கள் யாராவது வந்து உறுதிப் பத்திரம் எழுதி தந்தால் வெளியே விடலாம் என முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும், உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர முன்வராததால், அவரது ஜாமின் ரத்து செய்யப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த காந்திமதி, சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காந்தி மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.