திருவள்ளூரில் பெண் போலீஸ் குடும்ப பிரச்சினையால் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூரில் பெண் போலீஸ் குடும்ப பிரச்சினையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-01-01 11:41 GMT

திருவள்ளூரில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் . இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கு காரணம்  குடும்ப பிரச்சினையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றியவர் ரோஜா. இவரது கணவர் ராஜ்குமார். இவர்கள் திருவள்ளூர் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தனர். மாவட்ட குற்றப் பிரிவில் முதல் நிலைக் காவலராக ராஜ்குமார் பணியாற்றுகிறார். காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு முகேஷ் என்ற மகனும் சம்யுக்தா என்ற மகளும் உள்ளனர்.

நேற்றிரவு பணி முடித்து ராஜ்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர், உடனடியாக சமையல் செய்து தர வேண்டும் என்று ரோஜாவிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு ரோஜா, ‘’ தற்போது சமைக்கநேரமில்லை, காலையில் வேலைக்கு செல்ல வேண்டும். எனவே,ஓட்டலில் வாங்கி வந்து சாப்பிட்டு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது தானே’’ என்று கூறியுள்ளார். அதற்கு ராஜ்குமார், ‘’மதியமும் வீட்டில் சமைக்கவில்லை இரவும் சமைக்காமல் இருந்தால் எப்படி’’ என்று கேட்டதால் அவர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது படுக்கை அறைக்கு சென்ற காவலர் ரோஜா உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டுள்ளார்.ஹாலில் உட்கார்ந்திருந்த ராஜ்குமார், சுமார் 10 நிமிடம் கழித்து கதவை தட்டியபோது திறக்கவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று  பார்த்தபோது ரோஜா மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே ரோஜா இறந்துவிட்டார் என்று உறுதி செய்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சென்று, ரோஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினையில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News