தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை, நகை கொள்ளை வழக்கில் இருவர் கைது

வாலாஜாபாத் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் போலீசார் இருவரை கைது செய்தனர்.

Update: 2024-06-03 12:15 GMT

வாலாஜாபாத் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட கைது செய்யப்பட்ட இருவருடன் தனிப்படை போலீசார்.

காஞ்சிபுரம் மாவட்டம்,  வாலாஜாபாத் அருகேயுள்ள கட்டவாக்கம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் மூதாட்டி சுகுணா(65).

இவர் தனது வீட்டின் முதல் மாடியில் தனியாக வசித்து வந்துள்ளார்.இவர் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி இரவு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்த நிலையில் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தன.

இது குறித்து சுகுணாவின் மகளும் சென்னை திருநின்றவூரில் வசித்து வருபவருமான பாரதி என்பவர் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

ஆதாயக் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு புகாரின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செல்போன் எண்கள் ஆகியனவற்றின் மூலம் விசாரணை மேற்கொண்டதில் எதிரிகள் பற்றிய விபரம் தெரிய வந்தது.

விசாரணையில் வேலூர் மாவட்டம்,  அணைக்கட்டு தாலுகா கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்த க.மோகன்(26),  கும்ப கோணம் தாராசுரம் பெரியகாலணியை சேர்ந்த பெரியண்ணாபிரபு(24)என்பதையும் காவல்துறையினர் தெரிந்து கொண்டு அவர்களை தேடிய போது இருவரும் கட்டவாக்கம் ஏரிக்கரையில் மறைந்திருந்தனர்.

தனிப்படையினர் கட்டவாக்கம் ஏரிக்கரையில் குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது இருவரும் தப்பி ஓடியுள்ளனர். தப்பி ஓடியதில் பிரபுக்கு இடது காலிலும்,மோகனுக்கு இடது கையிலும் காயம் ஏற்பட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

மூதாட்டி கொலை தொடர்பான காவல்துறை விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சி அளித்துள்ளது.

கொலை குற்றவாளிகள் இருவரும் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு அதே வீட்டின் கீழ் தளத்தில் தங்கி இருந்து தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் பணி பிடிக்கவில்லை எனவும்,  பாட்டியிடம் தங்க நகைகள் இருப்பதால் அதை கொள்ளையடிக்கலாம் என சதி திட்டம் தீட்டி இருவரும் கடந்த 15 தினங்களுக்கு முன்பு வீடு காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். 

இந்நிலையில் அன்று காலை மீண்டும் கட்டவாக்கம் வந்து மூதாட்டி கீழே சென்ற சமயம் பார்த்து மாடிக்கு சென்று அறையில் பதுங்கி இருந்து அவர் வந்ததும் வாயில் துணியை அடைத்து அவரை கொலை செய்து 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாய் இருந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Tags:    

Similar News