திருச்சி பிரணவ் ஜுவல்லர்ஸ் மதனை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு
திருச்சி பிரணவ் ஜுவல்லர்ஸ் மதனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
திருச்சி கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை இயங்கி வந்தது. இதன் கிளை நிறுவனங்கள் திருச்சி மலைக்கோட்டை, மதுரை, கும்பகோணம் உள்பட 8 இடங்களில் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனம் தங்களது கடையில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை நம்பி ஏராளமானவர்கள் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் மேற்கண்ட நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.
அவர்கள் விளம்பரம் செய்த படி சில மாதங்கள் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுத்துள்ளனர். பின்னர் கடந்த மாதம் அதன் இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் திடீரென முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினர். அதைத்தொடர்ந்து திருச்சி உட்பட அனைத்து கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் பிரணவ் ஜுவல்லரி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் பல்வேறு இடங்களில் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிரணவ் ஜூவல்லர்ஸ் இயக்குனர்கள் மதன், அவருடைய மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அந்த நகைக்கடை கிளைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 80 கிலோ வெள்ளி, சுமார் 110 பவுன் தங்க நகைஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அதன் மேலாளர் நாராயணனை கைது செய்தனர்.
இயக்குனர்கள் மதன், கார்த்திகா ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்தனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் இருவரும் வெளிநாடு தப்பிச்செல்லாமல் தடுக்க லுக் அவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மதன் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவரை வருகிற 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டார். பின்னர் மதன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதன் மீது 1500க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். மேலும் தற்போது வரையிலும் தினமும் 10 பேர், 20பேர் தொடர்ச்சியாக புகார் அளித்து வருகின்றனர். ஆகவே மோசடி தொகை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சரணடைந்த மதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பரண்டு லில்லிகிரேசி மதுரை சென்றார். இன்று மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மதனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.