அம்பானி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட திருச்சி கும்பல் கைது
அம்பானி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட திருச்சி கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடந்தது. 3நாட்கள் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகர் நடிகைகள் முக்கிய பிரபலங்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.
பில்கேட்ஸ், மார்க்சூகர்பெர்க் என உலக பெரும் பணக்காரர்களும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தனர். 3 நாட்கள் மிகவும் ஆடம்பரமாக திருமண நிகழ்ச்சி நடந்தது. ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம், விதவிதமான உணவு வகைகள் என பிரமாண்டமாக இந்த திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதற்காக மட்டும் சுமார் 1,300 கோடி ரூபாயை முகேஷ் அம்பானி செலவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியில் திருடுவதற்காக திட்டமிட்டு தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வந்த ஐந்து பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றி விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருக்கும் பணம் மற்றும் லேப்டாப்பை திருடும் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக ராஜ்கோட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதேபோல் கடந்த 2 ஆம் தேதி ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்து லேப்டாப் மற்றும் 10 லட்சம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கார் கண்ணாடியை உடைத்து பணம் திருடிய அந்த கும்பலில் ஒருவரின் அடையாளம் தெரிந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர். இதில் அந்த நபர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில் அவர்கள் 5 பேர் கும்பலாக சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் 5 பேரும் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் கொடுத்த தகவலின் படி, அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். அதன்படி, தீபக், ஜெகன், குணசேகரன், முரளி, ஏகாம்பரம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் கூறுகையில் மிகப்பெரும் பணக்காரர் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்ததை கேள்விப்பட்டு அங்கு திருடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். அம்பானி வீட்டில் திருடுவதற்காகவே இவர்கள் குஜராத் வந்திருக்கின்றனர். எப்படியாவது அம்பானி வீட்டில் கொள்ளை அடித்து லைஃபில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ரயில் ஏறி குஜராத் மாநிலம் ஜாம்நகர் வந்திருந்தனர். ஆனால் அவர்களது திட்டம் நிறைவேறுவதற்கு முன்பாக சிக்கி விட்டனர் என கூறி உள்ளார்கள்.