தமிழக மாணவர்கள் மீது ஆந்திரா சுங்க சாவடியில் பயங்கர தாக்குதல்

ஆந்திரா சுங்க சாவடி ஊழியர்கள் தமிழக மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளனர்.

Update: 2022-10-23 07:52 GMT

தாக்குதல். கோப்பு படம்.

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு  இரு மாநிலங்கள் சார்பில் தினசரி  பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் ஆந்திராவில் இருந்தும்  பஸ்கள் தமிழகத்திற்கு வந்து செல்கின்றன. அதோடு  இரு மாநிலங்களுக்கும் இடையேயான வர்த்தக போக்குவரத்தும் உள்ளது. ஆந்திராவில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு நூற்றுக்கணக்கான லாரிகள் தினசரி தமிழகம் வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான  மாணவர்கள் ஆந்திரா மாநிலம் திருப்பதி மற்றும் அதை சுற்றி  உள்ள பல சட்டக்கல்லூரிகளில்  சட்டப்படிப்பு படித்து வருகிறார்கள். தற்போது அங்குள்ள சட்டக்கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடந்து வருகிறது. இந்த  தேர்வை எழுதுவதற்காக சென்னைபகுதியில் இருந்து மாணவர்கள் கார்களில் ஆந்திரா சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் சனிக்கிழமை அன்று  தேர்வுகளை எழுதி முடித்த தமிழக மாணவர்கள் மீண்டும் சென்னைக்கு கார்களில்  திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.அப்போது ஆந்திரா மாநிலம் புத்தூர் அருகே எஸ்.பி.புரம் சுங்கச்சாவடி வழியாக வந்த  மாணவர்களின் காரில் சுங்ககட்டணம் செலுத்தும் பாஸ்ட் டேக் சரியாக செயல்படவில்லை. அதனால் இருமடங்கு பணம் கட்டும்படி சுங்க சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர். பாஸ்ட் டேக்கில் பணம் உள்ளது அதனால் ஸ்கேன் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளும்படி மாணவர்கள் கூறினார்கள். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழக சட்டக் கல்லூரி மாணவர்களை பயங்கரமாக  தாக்கினர்கள். சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த ஆந்திரா மக்களும் தமிழக மாணவர்களை விரட்டி விரட்டி தாக்கினார்கள். இரும்பு கம்பி, உருட்டுக்கட்டைகளால் மாணவர்களை தாக்கியதோடு அவர்கள் வந்த கார்களையும் அடித்து நொறுக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பெரிய கலவரம் ஏற்பட்டது போல் காட்சியளித்தது.

சுங்கச் சாவடி வழியாக வந்த பல தனியார் கார்களின் கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கிலோ மீட்டர்   தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த மோதல் பற்றி தகவல் அறிந்த  வடமாலா பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி அங்கு அமைதி ஏற்படுத்தினர். சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதில் 15மேற்பட்டதமிழக மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தமிழக பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  

இந்த தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், "ஆந்திர எல்லை  சுங்கச்சாவடியில் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில்  தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News