தமிழக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு
தமிழக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்.
தமிழக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிண்டியில் ராஜ்பவன் என்ற பெயரில் தமிழக ஆளுநர் மாளிகை உள்ளது. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கக்கூடிய இந்த மாளிகை முன் இன்று பிற்பகல் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் ஆளுநர் மாளிகை கேட்டை நோக்கி பெட்ரோல் குண்டு வீசினார்.
அது வெடித்து சிதறுவதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையம் ஆகியவற்றின் மீது வெடிகுண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று சிறையில் தண்டனை அனுபவித்து வந்த தனக்கு ஆளுநர் விரைவாக ஜாமீனில் வெளி வருவதற்கு அனுமதி கொடுக்காத காரணத்தால் வெடிகுண்டு வீசியதாக அவர் போலீசில் அளித்துள்ள முதல் கட்ட வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தை கவர்னரின் தனி செயலாளர். கிரிலோஷ் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது ஆளுநராக ஆர்.என். ரவி உள்ளார். இவர் முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, சனாதன பிரச்சனை, நீட் தேர்வு விவகாரம் என பல பிரச்சினைகள் தொடர்பாக தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர். என். ரவிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கூட ஆளுநர் ரவி தமிழகத்தில் விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு மறைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசின் மீது கடும் குற்றம் சுமத்தினார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்து உள்ளார். இப்படி ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில் கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநர் மாளிகளை முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்திற்கு வேறு எதுவும் காரணம் உண்டா? என்கிற கோணத்திலும் சென்னை மாநகர போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு சுற்றுப்பயண நிகழ்ச்சியிலும் மாற்றம் எதுவும் இல்லை என்றும் போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.