முறைகேடு வழக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது
முறைகேடு வழக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் இன்று கைது செய்யப்பட்டார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அரசு செலவில் அலுவலர்களை தனது தனிப்பட்ட நிறுவனங்களுக்காக பயன்படுத்தியதாகவும், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் காவல்துறையில் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தர் ஜெகநாதன் தனியாக கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதில் அரசு அலுவலர்களை பயன்படுத்தியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை ஜெகநாதன் தொடங்கியதாக புகார் எழுந்தது. பல்வேறு நபர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து தனி நிறுவனத்தை தொடங்கி உள்ளார் துணைவேந்தர் ஜெகநாதன். அரசு ஊழியர் வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தை தொடங்க அனுமதி இல்லாத நிலையில் ஜெகநாதன் நண்பர்களுடன் இணைந்து பங்குதாரராக இருந்துள்ளார். இது உறுதி செய்யப்பட்டதால் ஜெகநாதன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக இதுபோன்ற சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில் இன்று துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.