திருச்சியில் பள்ளி மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு பொது மக்கள் சாலை மறியல்
திருச்சியில் பள்ளி மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு பொது மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.;
போராட்டம் நடத்த வந்தவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருச்சியில் பள்ளி மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் கூலித் தொழிலாளி. இவரது மகள் ஜெயஜோதி (வயது 16) இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். வழக்கம்போல் இன்று காலை அவரது அண்ணன் விஜயகுமார் தனது மோட்டார் சைக்கிளில் தங்கையை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டார். சிந்தாமணி பஜார் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சறுக்கி அண்ணன்-தங்கை இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் ஜெயஜோதி சாலையில் விழுந்தார்.
அடுத்த நொடி அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் பின் சக்கரத்தில் சிக்கிய ஜெயஜோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் விபத்து நடந்துள்ளது. எனவே சிந்தாமணி பஜார் சாலையை உடனடியாக செப்பனிட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திற்கு முயன்றனர்.
தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விபத்து குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து சம்பவம் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.