கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி விசாரணை
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கோவையில் கார் வெடித்து தீப்பிடித்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காரில் வெடி மருந்துகளை ஏற்றிவந்த போது அது வெடித்து சிதறியதா?, இதில் பெரிய சதி திட்டம் உள்ளதா? என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் இந்த கார் வெடித்து தீப்பிடித்த சம்பவம் நடந்தது. இதில் அந்த காரில் இருந்த ஒருவர் பலியானார். போலீசார் நடத்திய விசாரணையில் காரில் உடல் கருகி இறந்து கிடந்தது கோட்டைமேடு எச்.எம்.பி.ஆர். தெருவை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்று தெரியவந்தது. தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனடியாக கோவைக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கார் வெடித்து சிதறிய இடத்தில் இருந்து ஆணிகள், இரும்பு குண்டுகள் (பால்ரஸ்) கைப்பற்றப்பட்டன. காரும் உருக்குலைந்து கிடந்தது. இவை எல்லாம் கார் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது போல் உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள். காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களும் கருகி கிடந்தன.
காரில் இறந்து கிடந்த ஜமேஷா முபின் என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அவரது வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது ஜமேஷா முபின் மற்றும் 5 பேர் வெள்ளை நிறத்திலான ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஜமேஷா முபினுடன் உடன் இருந்த உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரை சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர். 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோர் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டப்பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைதான 5 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த வழக்கை மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பு என்.ஐ.ஏ. விசாரிக்க தொடங்கி உள்ளது. தேசிய புலனாய்வு முகமையின் டி.ஐ.ஜி. மற்றும் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் கோவை சென்று விசாரணை நடத்தினார்கள். காரில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், ஜமேசா முபினின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்தும் கோவை போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர். கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.