தூத்துக்குடி அருகே சட்டவிரோதமாக 4 மான் கொம்பு, 5 வீச்சு அரிவாள், 4 கத்தி, குத்துக்கம்பி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவத்தையாபுரம் சாமிகோவில் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஆனந்த சேகர் என்பவரை சோதனை செய்தபோது அவரது பைக்கில் 1 மான் கொம்பு, 1 கத்தி, 1 மற்றும் வீச்சு அரிவாள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மான் கொம்பு மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசனை ஆனந்த சேகர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனையிட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
எஸ்பி உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் போலீசார் சோதனையிட்டதில், அவரது வீட்டிலிருந்து மேலும் 3 பெரிய வீச்சு அரிவாள், 1 அரிவாள், 3 பெரிய கத்தி, 3 மான் கொம்பு மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடன் கூடிய பெரிய குத்து கம்பி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சாயர்புரம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆனந்த சேகரின் பைக் மற்றும் அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 மான் கொம்பு, 3 பெரிய வீச்சு அரிவாள், 2 அரிவாள், 4 பெரிய கத்தி மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடன் கூடிய பெரிய குத்து கம்பி ஆகியவற்றை பார்வையிட்டு விசாரணை செய்தார். பின் காவல்துறை அதிகாரிகளிடம் ஆனந்த சேகருக்கு யார், யாருடன் தொடர்பு உள்ளது, அவர் எதற்காக சட்டவிரோதமாக இதுபோன்ற பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளார் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.