அண்ணாபல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் மயமாக்கலில் பல கோடி ரூபாய் முறைகேடு
அண்ணாபல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் மயமாக்கலில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
இந்தியாவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் 1978ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் சென்னை கிண்டியிலும், துணை வளாகம் சென்னை குரோம்பேட்டையிலும் உள்ளன.பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் பொறியியல் படிக்க அண்ணா பல்கலைக்கழகத்தை தான் முதலில் தேர்வு செய்வார்கள்.இங்கு படிப்பவர்களின் அறிவு, திறமையை கணக்கில்கொண்டு அதிகமான நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை இங்கு இருந்து தான் தேர்வு செய்கிறார்கள். அதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க போட்டி கடுமையாக இருக்கும். இவ்வாறு புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது கல்வி துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நடந்த தமிழக சட்ட மன்ற கூட்டத்தில் இந்திய தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் முக்கிய பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சான்றிதழ் அச்சடிப்பதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 2016-ம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள், தரவரிசை சான்றிதழ்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2பிரபல நிறுவனங்களுடன் ரூ.11.41 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. வழக்கமாக பதிவாளர் மற்றும் கொள்முதல் குழுவால் இந்த ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் தேர்வு கட்டுப்பாட்டாளரே இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளார். இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதில் ஏல மோசடி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் மாணவர்களின் 7 லட்சத்து 33 ஆயிரத்து 722 பதிவுகள் மட்டுமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் 20 லட்சத்து 92 ஆயிரத்து 722 பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதற்காக ஜி.எஸ்.டி லிமிட்டெட் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டது எனவும், செய்யாத பணிக்காக, மேட்ரிக்ஸ் இன்க் நிறுவனத்திற்கும் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதேபோல் வெற்றுச் சான்றிதழ்களை அச்சிடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐ.எப்.எப் லிமிடெட் நிறுவனம், ஜி.எஸ்.டி லிமிடெட் நிறுவனத்தின் சகோதர நிறுவனம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் ரூ.57.14 கோடி மதிப்பில் அதிக அளவு வெற்றுச் சான்றிதழ்களை கொள்முதல் செய்துள்ளது. மேலும் சான்றிதழின் வடிவத்தை மாற்றி உள்ளனர். இதனால் ரூ.24.50 கோடி மதிப்புள்ள சான்றிதழ்கள் எதற்கும் பயன்படுத்த முடியாததாகிவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் மயமாக்கல், வெற்று சான்றிதழ்களை அச்சடித்தல் ஆகியவற்றில் மட்டும் ரூ.77 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது.
இவ்வாறு இந்திய தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.