முதியவர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த முதியவர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி கிரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.
குமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. சந்தியா, உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பள்ளிபாளையம் பிரிவு அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த கந்தசாமி, (வயது70), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து புகையிலை பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.
குமாரபாளையம் அருகே மனைவியை பிரிந்த நபர் வேறொரு பெண் வீட்டில் இறந்து கிடந்தார்.
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், (வயது60). முன்னாள் மின் வாரிய ஊழியர். இவரது மனைவி பிரபாவதி, (51). மேட்டூர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். ரவிச்சந்திரன் பல ஆண்டுகளாக மனைவியை பிரிந்து பல பெண்களுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை 8 மணியளவில், பிரபாவதியின் அக்காள் தேவி போன் செய்து, குமாரபாளையம், எதிர்மேடு, பாரதி நகர் பகுதியில் உள்ள செல்வி என்பவர் வீட்டில், ரவிச்சந்திரன் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
இது பற்றி தகவலறிந்த பிரபாவதி, உறவினர்களுடன் நேரில் சென்று பார்த்த போது, செல்வி என்பவர் வீட்டில் கணவர் ரவிச்சந்திரன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் பிரபாவதி புகார் செய்து, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை செய்திட வேண்டியும் புகார் கொடுத்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.