இறுதி கட்டத்தை நெருங்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கால் அ.தி.மு.க.வில் கலக்கம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் அ.தி.மு.க.வில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.;
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் சினிமா படங்களையும் மிஞ்சும் அளவுக்கு மர்ம கதை போல் உள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது கொடநாடு எஸ்டேட். இது இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பகுதி.1991-96 ஆட்சிக்காலத்தில் மறைந்த ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை வாங்கினார்.இந்த எஸ்டேட் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான இடம். பல முக்கிய முடிவுகளை இங்கிருந்தபடிதான் ஜெயலலிதா எடுத்துள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஒரு கூலிப்படை எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்தது. மற்றொரு காவலாளி கிருஷ்ணா பகதூர் என்பவரை தாக்கி கட்டி போட்டு விட்டு பல பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். பல முக்கிய ஆவணங்களையும் இந்த கும்பல் தூக்கிச்சென்றதாகவும் கூறப்பட்டது. 11 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
ஒற்றை தலைமை பிரச்சனையால் அ.தி.மு.க. இரு அணிகளாகி விட்டன. இப்போது இறுதி கட்டத்தை நெருங்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இரு அணிகளுக்குமே பெரிய தலைவலியாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி இருந்த போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கில் யார், யாரல்லாம் சிக்கப்போகிறார்களோ? என்று தற்போது அ.தி.மு.க. வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் முக்கிய நபராக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே நடந்த ஒரு விபத்தில் இறந்துவிட்டார். மற்றொரு குற்றவாளி சயான் சென்ற காரும் கேரளாவில் விபத்தில் சிக்கி அவர் மனைவியும், மகளும் உயிரிழந்தனர். சயான் மட்டும் தப்பினார். மேலும் கொடநாடு எஸ்டேட் ஊழியர் தினேஷ்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததும் மர்மாக உள்ளது. கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஸம்ஷீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்கிற பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம் சி.பி.சி.ஐ.டி.க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இனி புதிய எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும், புதிதாக நடத்தப்படும் விசாரணை விவரங்களும் இடம்பெறும். அதோடு புதிதாக குற்றவாளிகளின் பட்டியல் உருவாக்கப்படும் என்றும் இதில் யார் பெயர் இடம்பெறப் போகிறது? என்பது தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய பல அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம், வெட்டி அகற்றப்பட்டுள்ளது. பல தடயங்களை அழிக்க முயற்சிகள் நடந்துள்ளதையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கொலை கும்பல் தாக்கியதில் உயிர்தப்பிய மற்றொரு காவலாளி கிருஷ்ணா பகதூர் தற்போது நேபாளத்தில் வசிப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரிடம் நோில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேபாளத்துக்கு விரைவில் செல்ல உள்ளனர். மேலும் இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் விரையில் முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்றும், அது அ.தி.மு.க.வில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.