ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காஞ்சிபுரம் மாநகராட்சி பில் கலெக்டர் கைது

காஞ்சிபுரம் மாநகராட்சி பில் கலெக்டர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-30 10:49 GMT

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.10  ஆயிரம் லஞ்சம் வாங்கிய  பில் கலெக்டர் ரேணுகா.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்து பெயர் மாற்றம் செய்ய பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளர் ரேணுகாவை காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி வசூலிப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரேணுகா. காஞ்சிபுரம் மதுராந்தோட்டம் தெரு பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் தனக்கு சொந்தமான 460 சதுர அடி இடத்தை தனது மகன்கள் பெயரில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணிபுரியும் ரேணுகா பெயர் மாற்றம் செய்ய சுந்தரிடம் 15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சுந்தர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் செய்த  ஏற்பாட்டின்படி ஆலடி தோப்புத் தெரு பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரேணுகாவிடம் லஞ்ச பணம் 10 ஆயிரத்தை இன்று சுந்தர் கொடுத்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேணுகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பில் கலெக்டர் ரேணுகாவை காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். அதனை தொடர்ந்து ரேணுகா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஏற்கனவே  மாமன்ற உறுப்பினர்கள் பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாக புகார் நிலவிவரும் நிலையில் , இன்று வரி வசூலிப்பாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட மாவட்ட பத்திரப்பதிவு ஊழியர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால்  கைது செய்யப்பட்டு இருப்பது அரசு ஊழியர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News