திருச்சியில் நடந்த மீன் வியாபாரி கொலையில் கைதானவர் மீது குண்டர் சட்டம்

திருச்சியில் நடந்த மீன் வியாபாரி கொலையில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2024-02-05 14:37 GMT

திருச்சி மீன் மார்க்கெட் அருகே மீன் வியாபாரியை கொலை செய்த வழக்கில் கைதானவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். மீன் வியாபாரி. இவர் கடந்த 29 -10 -2023 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் திருச்சி குழுமணி ரோட்டில் உள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்குவதற்காக வந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீன் மார்க்கெட் எதிரே உள்ள கண்ணாடி கடை அருகில் ராமராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே மீன் வியாபாரி துடிதுடித்து இறந்தார். இந்த கொலை தொடர்பாக திருச்சி உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ரவுடி பிரபு என்கிற பப்லு (வயது 40 )மற்றும் 6 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ரவுடி பிரபு என்கிற பப்லு என்பவர் மீது எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக மூன்று வழக்குகளும், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு செசன்ஸ் கோர்ட் நீதிமன்ற காவல் நிலையத்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு, திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்து  இருந்ததாக ஒரு வழக்கு என பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

எனவே பிரபு என்கிற  பப்லு என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, பிரபுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்று உத்தரவிட்டார். இந்த ஆணை திருச்சி மத்திய சிறையில் உள்ள ரவுடி பிரபு என்கிற பப்லுவிடம் சார்வு செய்யப்பட்டது .இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி பாதுஷா என்கிற பல்பு பாட்ஷா ஏற்கனவே குண்டர்  சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகரில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News