ஜோதிடத்தை நம்பி விஷம் கொடுத்து காதலனை தீர்த்துக்கட்டிய கல்லூரி மாணவி கைது

ஜோதிடத்தை நம்பி தனது காதலனை விஷம் கொடுத்து கொன்ற கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2022-10-31 11:35 GMT

 ஷாரோன் ராஜ் - கிரீஷ்மா.

ஜோதிடத்தில் கூறப்பட்டு இருந்ததை நம்பி தனது காதலனை கல்லூரி மாணவி ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.தமிழகத்தின் கன்னியாகுமரி-கேரளா எல்லையில் அமைந்துள்ளது பாறசாலை மூறியன்கரை என்ற ஊர். இந்த ஊரை  சேர்ந்தவர் ஜெயராஜன்.அவருடைய மகன்  ஷாரோன் ராஜ். வயது 23, பி.எஸ்சி.பட்டப்படிப்பில்  ரேடியாலஜி எடுத்து படித்தார். இவர்,  களியக்காவிளை அருகே கேரளா மாநில எல்லையில் உள்ள  ராமவர்மன்சிறை என்ற பகுதியில் வசிக்கும் கிரீஷ்மா. வயது22. என்ற பெண்ணை கடந்த ஒரு ஆண்டாக உயிருக்கு உயிராக  காதலித்து வந்தார். கிரீஷ்மா கன்னியாகுமரியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 

இவர்களுடைய காதல் கிரீஷ்மாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலை ஏற்றுக்கொள்வில்லை. அதனால் அவளுக்கு வேறு இடத்தில்  மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்தனர். அவர் வசதியான  மாப்பிள்ளை. இந்த நிலையில்  கிரீஷ்மா தனக்கு தெரிந்த ஜோஷியர்  ஒருவரிடம் தனது ஜாதகத்தைகொடுத்து பார்க்கச் சொன்னாா்.  கிரீஷ்மாவின் முதல் கணவர் திருமணம் முடிந்த சில நாட்களில் இறந்து  விடுவார் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாக  ஜோஷியர் தெரிவித்தார். இதைக்கேட்டு கிரீஷ்மா அதிர்ச்சியடைந்தார். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்று பயந்தார்.அதனால் இதற்கு பரிகாரம் காண ரகசியமாக ஒரு திட்டம் தீட்டினார். தனது காதலன் ஷாரோன் ராஜை திருமணம் செய்து விட்டு பின்னர் அவனை கொலை செய்து விட்டால் பெற்றோர் பார்த்து இருக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்தார். ஆனால் காதலனை திருமணம் செய்வது யாருக்கும் தெரியக்கூடாது என்றும் நினைத்தார். இதனால் கடந்த மாதம் ஷாரோன் ராஜை சந்தித்து என்னை ஒரு சம்பிராயத்துக்காக திருமணம் செய்து கொள், அப்போது தான் எனதுபெற்றோர் நமது காதலை ஏற்றுக்கொள்வார்கள்  என்று  நம்பவைத்தார். பின்னர் அவர்கள்  ஒரு கோவிலில் ரகசியமாக தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர்.

அடுத்து தனது ரகசிய திட்டத்தை நிறைவேற்றி ஜாதகத்திற்கு பரிகாரம் செய்ய கிரீஷ்மா முடிவு செய்தார். இதற்காக கடந்த  14-ந் தேதி ஷாரோன் ராஜை  தனது வீட்டிற்கு கிரீஷ்மா அழைத்தார். காதலி அழைத்ததும் ஷாரோன் ராஜ் அவள் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த கசாயத்தை காய்ச்சி அதில் வயலுக்கு அடிக்கும் விஷ பூச்சி மருந்தை கிரீஷ்மா கலந்து தயாராக வைத்து இருந்தார்.ஷாரோன் ராஜிடம்  கசப்பான  இந்த கசாயத்தை உன்னால் குடிக்க முடியுமா? என்று  விளையாட்டாக பேசி கிரீஷ்மா சவால் விட்டார். இதை உண்மை என்று நம்பிய  ஷாரோன் ராஜ் அதை வாங்கி குடித்தார். பின்னர் ஜுஸ் ஒன்றையும் கிரீஷ்மா கொடுத்துள்ளார். அதையும்  ஷாரோன் ராஜ் குடித்துள்ளார். சிறிது நேரம் இருந்து விட்டு ஷாரோன் ராஜ் தனது நண்பரை வரச்சொல்லி மோட்டார் சைக்கிளில் ஏறி  வீட்டிற்கு சென்றார். வரும் வழியிலேயே அவர் வாந்தி எடுத்துள்ளார். நண்பர் கேட்டபோது ஜுஸ் குடித்தேன் ஒத்துக்கொள்வில்லை என்று கூறியுள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு அதிக அளவு வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

ஷாரோன் ராஜை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை மோசமானதால்  திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் ஷாரோன் ராஜை சேர்த்தனர். அங்கு அவர் கொடிய விஷம் குடித்து இருந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.  ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்தார். இது பற்றி ஷாரோன் ராஜ்  தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் செய்தார். காதலியை பார்க்க சென்ற இடத்தில் மகனுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் புகாரில்  தெரிவித்து இருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாரோன் ராஜின் காதலியான கிரீஷ்மாவிடம் கிடுக்குப்பிடி  விசாரணை நடத்தினர். அவர் முதலில் எதையும் ஒப்புக்கொள்வில்லை. ஷாரோன் ராஜ் குடித்த ஜுஸ் காலாவதியானது அதனால் அவருக்கு ஒத்து கொள்ளாமல் இறந்து இருக்கலாம் என்று போலீசாரிடம் கூறினார். ஆனால் போலீசார் அதை    நம்பாமல்  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது தான் அனைத்து உண்மையையும்  கிரீஷ்மா ஒத்துக்கொண்டார். ஜாதகத்தில் கூறப்பட்டு இருந்ததை நம்பி இவ்வாறு செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். கிரீஷ்மாவை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவளுடைய சந்தோஷ வாழ்க்கைக்கு ஒரு அப்பாவி இளைஞன் பலியாகி விட்டான். அவளுடைய வாழ்க்கையும் வீணாகி போய்விட்டது என்று அந்த பகுதி மக்கள் பேசிக்கொண்டார்கள்.வழக்கமாக  காதலர்கள் இதுபோன்றசெயலைச் செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்ஆனால் காதலி விஷம்கொடுத்து காதலன்இறந்தது புதிராக இருக்கிறது. உயிருக்கு உயிராய் காதலித்த காதலியின் நெஞ்சில் நஞ்சு இருந்ததை காதலனுக்கு தெரியாததால்  வந்த வினை? ....இளைஞர்களே... உஷாராய் இருங்க... உயிருக்கு மதிப்பு எவ்வளவு என்பது யாருக்காவது தெரியுமா? அதன் அருமை பத்துமாதம் பெற்ற தாய்க்குத்தான் தெரியும்? இந்த பெண்ணும் ஒரு தாயாகி இருக்கலாம். காலம் செய்த  கோலம்...ஆசையே துன்பத்துக்கு காரணம்... இதற்கு பலிகடா ஒரு உயிர்? என்னவெல்லாம் இன்னும் நடக்கப்போகிறதோ? எந்த காதல்தான்  உண்மையான காதல்... யாரைத்தான் நம்புவது? .....

Tags:    

Similar News