குமாரபாளையத்தில் குழந்தை விற்பனை: 2 பேர் கைது, 4 பேர் 'எஸ்கேப்'
குமாரப்பாளையத்தில் நடைபெற்ற குழந்தை விற்பனை தொடர்பாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்; தலைமறைவான 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை குள்ளங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர், 2019 ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, அந்த பெண்ணின் அக்கா கணவர் சின்ராஜ் மற்றும் தாயார் மகேஸ்வரி ஆகியோர் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்துகொண்டார்.
இதை தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு அந்த சிறுமிக்கு, ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆண் குழந்தையை ஐந்து மாதங்கள் வரை வளர்த்து வந்த நிலையில், சண்முகத்திற்கு கடன் ஏற்பட்டது. கடனை அடைப்பதற்காக தனது அண்ணன் கார்த்தியுடன் இணைந்து, சண்முகம் தனது ஆண் குழந்தையை, திருப்பூரில் வசிக்கும் நாகராஜ் என்ற இடைத்தரகர் மூலம் இரண்டரை (2.50) லட்ச ரூபாய் பணத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
இதற்கிடையே, சண்முகம் கடந்த ஜனவரி மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் இளம் வயதில் விதவையான சிறுமி, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியாவிடம் புகார் அளித்தார். மேலும், குமாரபாளையம் காவல் நிலையத்திலும் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குமாரபாளையம் போலீஸார், விற்கப்பட்ட குழந்தையை, திருப்பூரில் மீட்டதுடன், குழந்தையை விற்க உடந்தையாக இருந்த இடைத்தரகர் நாகராஜ் மற்றும் சண்முகத்தின் அண்ணன் கார்த்தி ஆகியோரையும் கைது செய்தனர்.
மேலும், ஏற்கனவே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிறுமியின் தாயார் மகேஸ்வரி மற்றும் அவரது அக்கா கணவர் சின்ராஜ் ஆகியோரும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக தலைமறைவான நான்கு பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணின் குழந்தையை இரண்டரை லட்ச ரூபாய்க்கு (2.50) விற்பனை செய்த சம்பவம், குமாரபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.