மேற்கு வங்காளத்தில் ஓட்டலில் விபச்சாரம் நடத்தியதாக பா.ஜ.க. பிரமுகர் கைது
மேற்கு வங்காளத்தில் ஓட்டலில் விபச்சாரம் நடத்தியதாக பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமிகளை வைத்து ஓட்டலில் விபசாரம் நடத்தியதாக பாஜக பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ரெய்டின் போது பாதிக்கப்பட்ட 6 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் தான் அங்குள்ள 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி கிராமத்தில் பெரிய பிரச்சனை நடந்து வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் அங்குள்ள பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் பட்டியலினத்தவர்களாக உள்ளதாக சொல்லப்படுகிறது. புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதற்கிடையே தான் ரேஷன் ஊழல் வழக்கில் ஷாஜகான் ஷேக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அவரை கைது செய்ய சென்றனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறையினரை தாக்கி ஷாஜகான் ஷேக்கை தப்பிக்க வைத்தனர். தற்போது அவர் தலைமைறவாக உள்ளார். இந்நிலையில் தான் ஷாஜகான் ஷேக்கை கைது செய்ய வலியுறுத்தி தொடர்ந்து பெண்கள் போராடி வருகின்றனர். இதற்கு பாஜக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை நடத்தி மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த திரெளபதி முர்முவுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது. போலியான குற்றச்சாட்டுகளை பாஜகவினர் முன்வைப்பதாக அந்த கட்சி கூறி வருகிறது. இதனால் தற்போது அங்கு பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. பெண்ணாக இருந்து கொண்டு மம்தா பானர்ஜியே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் மேற்கு வங்க மாநிலத்தில் லாட்ஜில் விபசாரம் நடத்தியதாக பாஜக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ஹவுராவில் நடந்துள்ளது. அதாவது ஹவுராவில் ஓட்டல் நடத்தி வருபவர் சப்யசாச்சி கோஷ். இவர் பாஜக கட்சியில் செயல்பட்டு வருகிறார். பாஜக பிரமுகராக வலம் வரும் இவரது ஓட்டலில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து போலீசார் ஓட்டலில் நுழைந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளரான பாஜக பிரமுகர் சப்யசாச்சி கோஷ் உள்பட 10க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் விபசாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டனர். இதில் 18 வயது நிரம்பாத சிறுமிகளும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் திரிணாமுல் காங்கிரஸ் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. பாஜக பெண்களுக்கு பாதுகாப்பு தராமல், விபசார புரோக்கர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛மேற்கு வங்க மாநில பாஜக பிரமுகர் சப்யசாச்சி கோஷ் ஹவுராவில் 18 வயது நிரம்பாத சிறுமிகளை வைத்து விபசாரம் நடத்தி உள்ளார். 11 பேரை கைது செய்துள்ள போலீஸ், 6 பேரை மீட்டுள்ளது. இதுதான் பாஜக, அவர்கள் பெண்களை பாதுகாப்பது இல்லை. அவர்கள் விபசார புரோக்கர்களை பாதுகாக்கிறார்கள்’’ என கூறியுள்ளது. இந்த விவகாரம் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.