துறையூரில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி கொள்ளையடிக்க முயற்சி
திருச்சி மாவட்டம்ட துறையூரில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி கொள்ளையடிக்க முயற்சி நடந்து உள்ளது.;
கொள்ளையர்கள் தாக்குதலில் காயம் அடைந்த செல்வி.
திருச்சி மாவட்டம் துறையூர் சாமிநாதன் மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் ராஜா (62). இவரது மனைவி செல்வி (வயது57).இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி அவரவர் ஊர்களில் வசித்து வருகின்றனர். ராஜாவும், செல்வியும் தனியாக உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை காற்றுக்காக திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.நள்ளிரவில் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர், வீட்டின் அலமாரி உள்ளிட்ட பகுதிகளில் பணம், நகை ஏதேனும் உள்ளதா? என்பதை ஆராய்ந்துள்ளார்.அப்போது சத்தம் கேட்டு விழித்துப் பார்த்த செல்வி, மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதில் பதற்றம் அடைந்த மர்ம நபர் செல்வியின் கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன், செல்வி துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக செல்வி அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.துறையூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
வீடு புகுந்த பெண்ணை தாக்கி நகை பணம் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை துறையூர் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.