ரூ.3 லட்சம் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக் காக்கும் வகையில் வழிப்பறி, கொள்ளை, கூட்டுக் கொள்ளை குற்றவாளிகள் மீது துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி காவல் ஆணையர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 14-1 -2024 ஆம் தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சஞ்சீவி நகர் சென்னை பைபாஸ் ரோட்டில் 3 லட்ச ரூபாய் மதிப்புடைய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் வாகனத்தை வழிப்பறி செய்வதாக பெறப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அக்கம் பக்கம் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்கிற சதீஷ் (வயது22) மற்றும் ஐந்து நபர்கள் ஒன்று சேர்ந்து மேற்படி இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விசாரணையில் சக்திவேல் என்கிற சதீஷ் என்பவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு மற்றும் ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருவது தெரிய வந்தது. அவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் காமினி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சதீஷிடம் இன்று சார்வு செய்யப்பட்டது. திருச்சி மாநகரில் இதுபோன்று திருட்டு,வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.