திருச்சியில் பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
திருச்சியில் பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
திருச்சியில் ரவுடி வீட்டின்மீது வெடிகுண்டு வீசப்பட்ட காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
திருச்சி திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பூர்வீகம் திருச்சி மேல கொண்டயம்பேட்டை ஆகும்.பிரபல ரவுடியான மணிகண்டன் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. கடந்த 2021ல் ஆட்டோ முருகன் என்பவரைகொலை செய்த வழக்கில் மணி கண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் முருகன் ஆதரவாளர்கள் அவருக்கு குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு ரவுடி மணிகண்டன் வீட்டின் மீது 3 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சிஅடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் பார்த்தபோது வீட்டின் நிலை கதவு கண்ணாடி உடைந்து கிடந்தது. குண்டு வாசலில்வெடித்துள்ளது. இதனால் அதிர்ஷ்டவசமாக வீட்டுக்குள் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்க நாதன் உடனடியாக அங்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அன்பு மற்றும்வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் நாட்டு வெடிகுண்டுக்கான எந்தமூலப்பொருட்களும் அங்கு கண்டறியப்படவில்லை. ஆகவே வீசப்பட்டது வெங்காய வெடி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ரவுடி வீட்டை குறி வைத்து மர்ம நபர் நாட்டு வெடிகுண்டை வீசிய காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் எதிரிகளை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.