திருச்சி அருகே ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது

திருச்சி அருகே ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-30 15:56 GMT

கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சுமதி.

திருச்சி அருகே ரூ. 7000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் துறையூர் பக்கம் உள்ள மாராடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின். இவரது மனைவி சத்யா (வயது 35 ).இவருக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 22 -8 -2023 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் மொத்தம் 138 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

ஆனால் அன்றைய தினம் சத்யா நேரடியாக அதனை பெற்றுக் கொள்ள முடியாததால் மறுநாள் 23ஆம் தேதி மாராடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்று அங்கு இருந்த கிராம நிர்வாக அதிகாரி சுமதி (வயது 35 )என்பவரிடம் பட்டா கேட்டார்.

அதற்கு அவர் தனக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் தான் பட்டா தர முடியும் என தெரிவித்தார்.  அவ்வளவு பணம் தர முடியாது என சத்யா கூறியதால் ரூ. 7000 கொடு என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்யா இது பற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து திருச்சி சரகக லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. மணிகண்டன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சேவியர் ராணி மற்றும் போலீசார் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாராடி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர். போலீசார் ஏற்கனவே தெரிவித்திருந்த ஏற்பாட்டின் படி ரூ. 7000 லஞ்ச பணத்தை சத்யா கிராம நிர்வாக அதிகாரி சுமதியிடம் கொடுத்தார் .

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீசார் வி.ஏ.ஓ. சுமதியை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News