இணைய குற்றங்களை தடுக்க உத்தரபிரதேசத்தில் 57 சைபர் க்ரைம் போலீஸ் நிலையங்கள்

இணைய குற்றங்களை தடுக்க உத்தரபிரதேசத்தில் 57 சைபர் க்ரைம் போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட இருக்கிறது.

Update: 2023-12-20 11:51 GMT

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்.

உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த 57 மாவட்டங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உத்தரப் பிரதேசம் தேசிய அளவில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றங்களுக்கு இடையூறாக குற்ற சம்பவங்கள் இருக்கின்றன. அதிலும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது உ.பி முழுவதும் சுமார் சைபர் கிரைம் 18 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் காவல் நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், புதியதாக 57 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து ரூ.127 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறார். எனவே விரைவில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இது மாநிலம் முழுவதும் சைபர் குற்றங்களை கணிசமாக கட்டுப்படுத்தும்.  சைபர் கிரைம் குற்றங்களில் உ.பி.யின் தண்டனை விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது.

அதாவது தேசிய அளவில் சைபர் கிரைம் குற்றங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை விகிதம் 46.5. ஆனால் உ.பியில் இது 87.8 சதவிகிதமாக இருக்கிறது. மாநிலம் முழுவதும் 838 பேர் சைபர் கிரைம் தொடர்பாக தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தை அனைத்து துறைகளிலும் முன்னணிபடுத்துவது தான் எங்கள் நோக்கம். இதற்காகதான் நாங்கள் உழைத்து வருகிறோம். விரைவில் தேசிய அளவில் உ.பி பெரிய வளர்ச்சியை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இணைய குற்றங்களும் தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. போலீசார் என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் இணைய குற்றவாளிகள் போலீசாரை ஏமாற்றி விட்டு எளிதாக தப்பி விடுகிறார்கள். நாள்தோறும் இணைய குற்றவாளிகளிடம் சிக்கி பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் தான் உத்தரபிரதேச மாநிலத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கை கூடுதலாக திறக்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News